முறையாக குடிநீர் வழங்காததால் அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
கருவனூரில் முறையாக குடிநீர் வழங்காததால் அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
புதூர்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கருவனூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் குழாயில் சிலர் மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுக்குழாயில் குடிநீர் சரியாக வருவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் விசாரித்து மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுபவர்களை எச்சரிக்கை செய்தனர். இந்தநிலையில் பொதுமக்கள் கருவனூர் மந்தையில் ஒன்றுகூடி முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று நேற்று காலை பஸ் நிலைய பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 அரசு டவுன் பஸ்களை சிறைபிடித்தனர். அதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊமச்சிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், மேற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயராம் வந்து உறுதிஅளித்தால் தான் பஸ்சை விடுவிப்போம். மேலும் குடிநீர் குழாய்களில் பொருத்தியுள்ள மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ஆணையாளர் அங்கு வந்து பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். 2 அரசு டவுன் பஸ்களும் விடுவிக்கப்பட்டன. அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story