காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகள் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை


காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகள் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 6:08 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு வசதியாக அறைகள் அமைக்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகத்திற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரெயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

காரைக்குடி, 

காரைக்குடி ரெயில் நிலையம் மும்முனை சந்திப்பு நிலையமாக உள்ளதால், அங்கு ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்தல், மராமத்து செய்தல் மற்றும் தண்ணீரை நிரப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேவையான தொழிற்கூடம் அமைக்க வேண்டும். அப்போது தான் ரெயில்வே தொழிலாளர்கள் அதிகம் இருப்பார்கள். இதனையொட்டி காரைக்குடி பகுதி நேரடி மறைமுக வளர்ச்சி பெறும்.

தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் தாழ்வாக உள்ள நடைமேடை தளத்தை உயர்த்தி கட்ட வேண்டும். மேலும் அங்கு மின்விளக்கு, கழிப்பறை வசதி, ஒலிபெருக்கியில் அறிவிப்பு வசதி உள்ளிட்டவற்றை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி ரெயில் நிலையத்தில் முகப்பு கட்டிடத்தில் காலியாக உள்ள மேல் பகுதியில் பயணிகள் தங்கும் அறை ஏற்படுத்தவும், மேலும் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைத்து மின் விளக்குகள் ஏற்படுத்தவும் மற்றும் அனைத்து நடைமேடைகளிலும் ஒலிபெருக்கி அறிவிப்பு கருவிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் கணினி பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்படாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனை திறந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மானாமதுரை ரெயில் நிலையத்தில் 2-ம் வகுப்பு பயணிகள் தங்கும் அறை பூட்டியே கிடக்கிறது. அதையும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story