வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 4 தேர்தல் பார்வையாளர்கள் வருகை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 4 பார்வையாளர்கள் வந்துள்ளனர். இவர்களை அரசியல்கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் தொடர்புகொண்டு கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, மனுக்கள் பரிசீலனையும் முடிந்துவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு அமக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் வாகன சோதனையின்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் தேர்தலை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பொதுப்பார்வையாளராக சுதம் காதே பந்தரிநாத், காவல் பார்வையாளராக ஆதித்யா குமார், செலவின பார்வையாளர்களாக வினய்குமார் சிங், ஆர்.ஆர்.என்.சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேலூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளை கண்காணித்து தேர்தலை சிறப்புடன் நடத்திட, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அரசியல்கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் காலை 10 மணி முதல் 11 மணிவரை தொடர்புகொண்டு ஆலோசனை மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story