சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2019 4:30 AM IST (Updated: 19 July 2019 10:03 PM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை அரசு அலுவலர்கள் பெற்று தர வேண்டும். சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும். குடிமராமத்து பணியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதனை கண்டுபிடித்து முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையோரம் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும். ஏரி, குளங்களை ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அகலப்படுத்த வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பணத்தை பெற்றுத்தர அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது போன்று துப்புரவு பணியாளர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். செங்கம் பகுதியில் கடந்த சில மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டுபோய் உள்ளது. ஆதாரங்களுடன் போலீசில் புகார் செய்தால் போலீசார் அலட்சியமாக இது எல்லாம் புகார் தருவீங்களா? என்று மிரட்டி விரட்டி விடுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

குறைதீர்வு கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் அளிக்க வேண்டும். ஆனால் ஒரு மனுவிற்கு கூட பதில் அளிப்பது இல்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நாங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

முன்னதாக விவசாயி ஒருவர் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு நேற்று நடந்த கூட்டத்தில் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில், யார் மீதாவது புகார் இருந்தால் மட்டுமே ஊராட்சி செயலர்களை மாற்ற முடியும் என்றார். அப்போது விவசாயிகளுக்கும், பதில் அளித்த அதிகாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் அந்த அதிகாரி கூட்டத்தில் இருந்து வெளியேறினால் தான் நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்வோம். இல்லையென்றால் நாங்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த அதிகாரி கூட்டத்தில் இருந்து சென்றதும் மீண்டும் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் ஆனந்த்மோகன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், துணை கலெக்டர் பயிற்சி தமயந்தி உள்பட வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Next Story