நத்தம் அருகே, ரேஷன் கடை கேட்டு 2 கிராம மக்கள் சாலை மறியல்


நத்தம் அருகே, ரேஷன் கடை கேட்டு 2 கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 July 2019 11:00 PM GMT (Updated: 19 July 2019 6:38 PM GMT)

நத்தம் அருகே பகுதி நேர ரேஷன் கடை கேட்டு 2 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நத்தம்,

நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சியில் உலுப்பகுடி, வீரப்பநாயக்கன்பட்டி, வேலாயுதம்பட்டி, புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் புன்னப்பட்டி, வேலாயுதம்பட்டியில் ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இருக்கிறது. உலுப்பகுடியில் உள்ள கடையில் வீரப்பநாயக்கன்பட்டி, காட்டுவேலம்பட்டி, குட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் குட்டூர் மற்றும் காட்டுவேலம்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதியில் இருந்து உலுப்பக்குடிக்கு செல்ல 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதனால் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே தங்கள் பகுதிகளில் தனித்தனியாக பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று 2 கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த குட்டூர், காட்டுவேலம்பட்டி கிராம மக்கள் தனித்தனியாக திண்டுக்கல்-நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் வட்ட வழங்கல் அலுவலர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, கிராம நிர்வாக அலுவலர் கொண்டல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து 2 கிராமங்களிலும் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்று உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக திண்டுக்கல்-நத்தம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story