ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது


ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 20 July 2019 3:15 AM IST (Updated: 20 July 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நேற்று என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவில் காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டது. மேலும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்களின் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி வேண்டுதலை வாடா விளக்கில் நிறைவேற்றினர். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்த பிறகே கோவில் உள்ளே அனுமதித்தனர். பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஆண்டுதோறும் பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காப்பு கட்டி விரதம் இருந்த விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண் பக்தர்கள் உள்பட பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்தனர். நேற்று விளாமுத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் காலையில் புறப்பட்ட பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மாரியம்மன் கோவிலுக்கு மதியம் சென்றடைந்தது. இதையடுத்து பக்தர்களின் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

Next Story