ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல்
ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, தோட்டக்கலைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு மானிய திட்டங்கள் குறித்த விளக்க கையேட்டினை வெளியிட்டார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
தங்கராஜ்: வெள்ளாறு பகுதியில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன்: தெற்கு வெள்ளாற்றில் உள்ள மதகுகள், பாசன கிளை வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். வள்ளநாட்டு ஏரியில் உள்ள 3 குட்டைகளை ஆழப்படுத்த வேண்டும். மணியம்பள்ளம் வெள்ளாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
சுப்பையா: மதகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.60 லட்சம் மத்திய கூட்டுறவு வங்கியில் வைப்பு வைக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குருங்களூர் கண்மாய் பகுதியில் தைல மரங்களை நடுவதற்கு நிலத்தை உழுவதால் மழை பெய்தும் கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
நடராஜன்: குளத்தூர் தாலுகாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நில அளவை செய்து தரக்கோரி மனு கொடுத்தும் பலனளிக்கவில்லை. குடிகள் மாநாட்டில் மனு கொடுத்து உடனடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இதுவரை முன்னேற்றம் இல்லை. வத்தானக்கோட்டை சாலையில் தைலமரக்கன்றுகள் நடுவதை நிறுத்த வேண்டும். மாவட்டம் வளம் பெற வேண்டும் என்றால் தைலமரங்கள் மற்றும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் தைல மரக்கன்றுகளை அரசு சார்பில் நடக் கூடாது.
அப்பாவு பாலாண்டார்: மரகன்றுகளை நடுவதற்கு பதிலாக மர போத்துகளை நட வேண்டும். எவ்வளவு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது குறித்து மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அத்தாணி ராமசாமி: காவிரி கடைமடை பகுதிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஆறுகளை ஆழப்படுத்தவும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரைமாணிக்கம்: பயிர் காப்பீடு செய்வது தொடர்பாக ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் பயிர் காப்பீடு யார் செய்து உள்ளார் என்பதை பதிவு செய்யும்போதே, அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். அப்போதுதான் பயிர் காப்பீடில் முறைகேட்டை தவிர்க்க முடியும்.
மாரிமுத்து: அனைத்து ஏரி மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அனைத்து அதிகாரிகளும் பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும். மான் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. எனவே, காட்டுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். தைலமரங்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை புதிதாக தைலமரக்கன்றுகள் நடப்பட மாட்டாது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story