அரசு அலுவலகங்களில் கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
அரசு அலுவலகங்களில் கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 2017-ம் ஆண்டு தமிழில் கோப்புகளை சிறப்பாக பராமரித்த தூத்துக்குடி மாவட்ட நிலஅளவை அலுவலகத்துக்கு கேடயம் பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கில், ஆட்சி மொழி வரலாறுச் சட்டம், ஆட்சி மொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
தாய் மொழியை முழுமையாக கடைபிடித்து வர வேண்டும். மொழி மீதுள்ள அன்பு, ஆசை, பற்று, பாசத்தினை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல், பாரம்பரிய கலாசாரம், மொழி உள்ளிட்டவை அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்து செல்ல வேண்டும். மொழிக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், கடிதங்கள் உள்ளிட்ட கோப்புகள் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு அரசு துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்குள்ளேயே போட்டியாக கொண்டு தமிழ் மொழியில் சிறந்து விளங்க வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தமிழில் பதில் கூற வேண்டும். அடுத்த ஆண்டு அலுவலகங்களில் 100 சதவீதம் தமிழ் மொழி பயன்படுத்தும் நிலையை உருவாக்கி நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் சம்சுதீன், உலக தமிழ் சங்க இயக்குனர் (பொறுப்பு) அன்புசெழியன், முன்னாள் அகர முதலித் திட்ட இயக்குனர் செழியன், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள் ராசு, சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story