மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 20 July 2019 3:00 AM IST (Updated: 20 July 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளங்களில் குற்றாலமும் ஒன்று ஆகும். இங்குள்ள அருவிகளில் சீசன் காலங்களில் தண்ணீர் கொட்டும். அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.

கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவியில் ஒரு சில நாட்களே தண்ணீர் அதிக அளவில் விழுந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக குற்றாலத்தில் சீசன் மந்தமாகவே இருந்தது. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் காத்திருந்து குளித்துச் சென்றனர். நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஐந்தருவியில் கற்கள், மரத்துண்டுகள் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று பலமாக வீசியது. தொடர்ந்து லேசான மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் இதமான சூழ்நிலை நிலவியது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் காலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியின் ஓரத்தில் நின்று குளித்தனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மதியம் 2.15 மணி அளவில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதில் அவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மெயின் அருவியில் மாலை 4 மணி அளவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் வெள்ளப்பெருக்கை பார்த்து சென்றனர்.

இதேபோல் ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவியில் மாலை 5.30 மணி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story