ஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடவு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடவு பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 July 2019 4:00 AM IST (Updated: 20 July 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

மத்திய அரசு நீர்வளத்தை மேம்படுத்த ஜலசக்தி அபியான் திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. நீர் ஆதாரங்களை பெருக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனை செயல்படுத்த மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும், அப்போது தான் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் ஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடும் விழா ஊட்டி அருகே முத்தநாடுமந்து காப்புக்காட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறை, தாவரவியல் துறையில் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள களைச்செடிகள் அகற்றப்பட்டு விக்கி, நாவல், செண்பகம் உள்பட மொத்தம் 150 சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதனை கால்நடைகள், வனவிலங்குகள் சேதப்படுத்தாத வகையில் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி வனப்பகுதியில் உள்ள யூகலிப்டஸ், அகசியா போன்ற மரங்கள் அகற்றப்பட்டு, மண்ணுக்கே உரித்தான சோலை மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்களை முழுமையாக அகற்றினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படும். சோலை மரக்கன்றுகளின் வேர்கள் பக்கவாட்டில் வளர்வதால், மண்ணை திடமாக பிடித்துக்கொள்ளும். அதனால் மண் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால் சோலை மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி, உதவி வன பாதுகாவலர் சரவணன், ஊட்டி அரசு கலைக்கல்லூரி துணை முதல்வர் எபனேசர், பேராசிரியர் ராமகிருஷ்ணன், வனச்சரகர் பாண்டிராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story