பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் குமாரசாமிக்கு, கவர்னர் நேரம் வழங்கியதில் பாரபட்சம் கிருஷ்ண பைரேகவுடா பேச்சு


பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் குமாரசாமிக்கு, கவர்னர் நேரம் வழங்கியதில் பாரபட்சம் கிருஷ்ண பைரேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கிய கவர்னர், குமாரசாமிக்கு நேரம் வழங்கியதில் பாரபட்சம் இருப்பதாக சட்டசபையில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை கடந்த 12-ந் தேதி கூடியது. நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தின் போது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது. குறிப்பாக நேற்று மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக சட்டசபையில் நேற்று மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு(2018) நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கவர்னர் வஜூபாய் வாலா காலஅவகாசம் வழங்கி இருந்தார். அன்று முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கிவிட்டு, தற்போது முதல்-மந்திரியாக உள்ள குமாரசாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 மணி நேரம் மட்டுமே கவர்னர் அனுமதி வழங்கியுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க வெறும் 15 மணிநேரம் மட்டுமே கவர்னர் வழங்கி இருப்பது சரியல்ல. கவர்னர் மாளிகையை பா.ஜனதாவினர் தவறாக பயன்படுத்தி கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 மணிநேரமே வழங்கி இருப்பது பாரபட்சமாக இருக்கிறது. அரசியலமைப்பு சாசனம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்திற்காக அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்தி கொள்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கர்நாடகத்தில் நடக்கும் அரசியல் நிலவரங்களை நாட்டு மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு பணியாற்றினால், நாடு வளர்ச்சி அடையும். அதை விட்டு விட்டு ரூ.30 கோடி கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது எழுந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், யாரையும் விலைக்கு வாங்கவில்லை என்று கூறினார்கள். இதுதொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் குறுக்கிட்டு காங்கிரஸ் கட்சியினரை பார்த்து எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அவர்களை நீங்கள் பாதுகாத்திருந்தால் சென்று இருப்பார்களா? என்று கூறினார்.

Next Story