புதுச்சேரிக்கு ரூ.1,623 கோடி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்.பி. வேண்டுகோள்


புதுச்சேரிக்கு ரூ.1,623 கோடி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு வைத்திலிங்கம் எம்.பி. வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 July 2019 5:00 AM IST (Updated: 20 July 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.1,623 கோடி நிதிக்கொடை வழங்கவேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரி,

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதை அறிக்கை வடிவில் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

புதுவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் நிதிக்கொடை வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. எனவே புதுச்சேரி அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு முன்னுரிமை அளித்து பரிசீலிக்கவேண்டும். புதுச்சேரி அரசுக்கு மத்திய உதவியாக 2019-20 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கும் சாதாரண மத்திய உதவி தான் இது.

அதேகேள்வியில் 6-வது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது புதுச்சேரி அரசுக்கு கூடுதல் மத்திய உதவியாக ரூ.367.67 கோடி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். அந்த வகையில் புதுவை அரசுக்கு கூடுதல் மத்திய உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

டெல்லியை பொறுத்தவரை ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதிய சலுகைகளுக்கான முழு நிதியையும் மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல் புதுச்சேரி ஓய்வூதியதாரர்களுக்கான ரூ.760 கோடியை மத்திய அரசு வழங்கவேண்டும். வருடாந்திர செலவினங்களை 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க நடுத்தர கால நிதிக்கொள்கை ஆவணம் அனுமதிக்கின்றது. அதன்படி புதுச்சேரிக்கான சாதாரண மத்திய கொடையில் ஆண்டு அதிகரிப்பை குறைந்தபட்சம் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆகவே 2018-19ம் ஆண்டு ரூ.1,476 கோடியாக இருந்த நிதிக்கொடையை 10 சதவீதம் அதிகரித்து ரூ.1,623 கோடியாக வழங்கவேண்டும்.

சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு தனி நிதி ஆணையம் உள்ளது. ஆனால் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு எந்த வரையறையும் செய்யப்படவில்லை. எனவே எங்கள் யூனியன் பிரதேசத்தை மத்திய நிதி ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளில் சேர்க்கவேண்டும். இல்லையெனில் திட்டமில்லா செலவினங்களுக்கான நிதி பற்றாக்குறையை மத்திய அரசு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story