குளங்களை தூர்வார தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும் - கலெக்டர் விக்ராந்த் ராஜா வேண்டுகோள்


குளங்களை தூர்வார தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும் - கலெக்டர் விக்ராந்த் ராஜா வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 July 2019 3:45 AM IST (Updated: 20 July 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

குளங்களை தூர்வார தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று கலெக்டர் விக்ராந்த் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா ஆகியோர் பேட்டை, அத்திப்படுகை, பூமங்கலம் உள்பட 5 கிராமங்களில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளங்களை முதல்கட்டமாக தூர்வார ஏற்பாடு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக கோவில் குளங்கள் அனைத்தையும் கண்டறிந்து தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, திருநள்ளாறு கோவிலுக்கு சொந்தமான 25 கோவில் குளங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை தூர்வாரும் பணியை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாத்தல் திட்டத்தின் கீழ் தூர்ந்துபோன, ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களை மீட்டெடுத்து தூர்வாரி தண்ணீரை சேமிக்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுத் துறைகள் ஒவ்வொன்றும் குளங்களை தத்தெடுத்து தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளங்கள் கண்டறியப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான குளங்கள் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாவதாக கூறப்படுகிறது. தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் தீவிரமான பணிகள் நடக்கிறது. இப்பணிகள் ஒருசில மாதங்களில் நிறைவடையும்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டால், காவிரி நீர்வரத்தின்போதும், பருவமழை காலத்திலும் முறையாக தண்ணீரை சேமிக்க முடியும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குளங்களை தூர்வாரவும், மரக்கன்று நடவும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், தனியார் தொழிற்சாலை, நிறுவனங்கள் தாமாக முன்வரவேண்டும். அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறு கலெக்டர் விக்ராந்த் ராஜா கூறினார்.

Next Story