வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு; உறவினர்கள் சாலை மறியல்


வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாகச் செத்தார். அவருடைய குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சடையாண்டி குப்பத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). இவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு மோனீஸ்வர் (4), விக்னேஷ்வர் (1½) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

செந்தில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் செந்தில் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகச் செத்தார்.

இதுகுறித்து தகவலின் பேரில் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்திலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து பலியான செந்திலின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நிர்வாகம் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரி செந்திலின் உறவினர்கள் நேற்றுக்காலை ஆரியபாளையம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதுபற்றி அறிந்ததும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி செந்திலின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு பெற்றுதர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார்கள். அதனை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story