அந்தியூர் அருகே பரிதாபம்; மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது


அந்தியூர் அருகே பரிதாபம்; மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது
x
தினத்தந்தி 20 July 2019 5:00 AM IST (Updated: 20 July 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் பகுதியை சேர்ந்தவர் கெஞ்சான் (வயது 72). அவருடைய மனைவி சின்னக்கண்ணு (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கெஞ்சானும், சின்னக்கண்ணும் தனியாக வசித்து வந்தனர்.

கெஞ்சான் மாடு மேய்க்கும் தொழிலாளி. தினமும் காலை மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுவிட்டு மாலையில் வீட்டுக்கு ஓட்டி வருவார். அதன்படி கெஞ்சான் நேற்று முன்தினம் காலை மாடுகளை பசுவன்பள்ளம் என்ற வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

மாலை 6 மணி அளவில் மாடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன. கெஞ்சான் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினருடன் அவர்கள் வனப்பகுதிக்கு சென்று நேற்று காலை தேடி பார்த்தனர்.

அப்போது கெஞ்சான் ஒரிடத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் யானையின் கால்தடம் இருந்தது. எனவே அவரை யானை மிதித்து கொன்றது தெரியவந்தது. இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கெஞ்சானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினர் பாதிக்கப்பட்ட கெஞ்சானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பசுவன்பள்ளம் பகுதியில் நீரோடைகள் அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீர் குடிக்க யானை உள்பட பல்வேறு விலங்குகள் வந்து செல்லும். இந்த நிலையில் தண்ணீர் குடிக்க வந்த யானை ஒன்று கெஞ்சானை மிதித்து கொன்றுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story