பல்லடத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற ரூ.7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர்; லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சமாக பெற்ற ரூ. 7 லட்சத்தை கைமாற்றிய 2 அதிகாரிகள் சிக்கினர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் பாலமுருக பிரபாகர். இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல் பத்திரப்பதிவு நடைபெற்றது. இதனால் காலையில் இருந்து மாலை வரை பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பல்லடம் சார் பதிவாளருக்கு கொடுக்க லஞ்ச பணத்தின் பங்கு தொகையை புரோக்கர் ஒருவர் கொண்டு செல்வதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் எழிலரசி, சவுந்தர்யா மற்றும் போலீசார் நேற்று மாலை பல்லடம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே மறைந்து நின்று கண்காணித்தனர்.
இதற்கிடையில் பத்திர பதிவுகள் முடிந்த நிலையில் மாலை 6 மணிக்கு ஒருவர் பையுடன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர் தான் கொண்டு சென்ற பணத்தை அதிகாரி பாலமுருக பிரபாகரிடம் கொடுத்தார். அப்போது வெளியில் இருந்து கண்காணித்துக்கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக உள்ளே புகுந்து, பாலமுருக பிரபாகரையும், அவருக்கு பணம் கொடுத்த புரோக்கரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர்களை அங்குள்ள அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பணத்தை பாலமுருக பிரபாகரிடம் கொடுத்த புரோக்கர், திருப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்றும், அவர் ரூ.7 லட்சத்தை, அதிகாரியிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரூ.7 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரித்தனர். விசாரணையில் திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில சென்னையை சேர்ந்த ஒருவர் இணை சார் பதிவாளாக பணியாற்றி வருவதும், அவர் கடந்த ஒரு மாதமாக விடுப்பில் சென்று இருப்பதும், இதனால் அவருக்கு பதிலாக சக்திவேல் என்பவர் இணை சார் பதிவாளராக (பொறுப்பு) வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வசூல் செய்த லஞ்ச பணத்தில் விடுப்பில் சென்ற அதிகாரிக்கு சேர வேண்டிய பங்கு தொகை ரூ.7 லட்சம் என்றும், அந்த தொகையை புரோக்கர் பாலகிருஷ்ணன் என்பவரிடம் சக்திவேல் கொடுத்து, அதை பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி பாலமுருக பிரபாகரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பாலகிருஷ்ணன், பல்லடம் சென்று அங்கு பணியில் இருந்த பாலமுருக பிரபாகரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த பணத்தை பெற்றுக் கொள்ளும் பாலமுருக பிரபாகர் வேறு ஒருவர் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பணத்தை சேர்த்து விடுவதாக தெரிகிறது. இதனால் திருப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் இணை பதிவாளருக்கு மாதம் தோறும் வசூல் செய்யப்படும் லஞ்ச பங்கு தொகை ரூ.7 லட்சம் என்றால் விடுப்பில் சென்ற அதிகாரி இதற்கு முன்பு எத்தனை மாதங்கள் திருப்பூரில் வேலை பார்த்தார்? ஒவ்வொரு மாதமும் அவருக்கு கிடைத்த லஞ்ச தொகை எவ்வளவு? இதே போல் பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணம் புரள்கிறதா, என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இணை சார்பதிவாளர் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய லஞ்ச பங்கு தொகை ரூ.7 லட்சம் பிடிபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அதிகாரிகளிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள அதிகாரிகளிடமும், அலுவலக ஊழியர்களிடமும், பணம் கைமாறியது தொடர்பான விசாரணை நடத்தியதுடன், அங்குள்ள ஆவணங்களையும் சரிபார்த்தனர். பல மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனை குறித்து, உரிய விசாரணைக்கு பின்னர் முழு விவரமும் தெரியவரும் என்றும், சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.