இறைச்சிக்காக மினிலாரியில் கடத்திய 60 கன்றுக்குட்டிகள் மீட்பு 2 பேர் கைது


இறைச்சிக்காக மினிலாரியில் கடத்திய 60 கன்றுக்குட்டிகள் மீட்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2019 4:01 AM IST (Updated: 20 July 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னராயப்பட்டணாவில் இருந்து பெங்களூருவுக்கு இறைச்சிக்காக மினிலாரியில் கடத்திய 60 கன்றுக்குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவில் இருந்து மினிலாரியில் ஏராளமான கன்றுக்குட்டிகள் கடத்தப்படுவதாக சென்னராயப்பட்டணா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சென்னராயப்பட்டணா டவுன் பாகூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினார்கள்.

போலீசாரை பார்த்ததும், மினிலாரியில் இருந்த 2 பேரும், கீழே இறங்கி தப்பியோட முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசார் மினிலாரியில் சோதனை செய்தனர். அப்போது மினிலாரியில் 60 கன்றுக்குட்டிகள் இருந்தன.

60 கன்றுக்குட்டிகள் மீட்பு

இதுகுறித்து போலீசார் அவர்கள் 2 பேரிடமும் விசாரித்தனர். அப்போது சென்னராயப்பட்டணாவில் இருந்து பெங்களூருவுக்கு இறைச்சிக்காக கன்றுக்குட்டிகளை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 60 கன்றுக்குட்டிகளை மீட்டனர். மேலும் மினிலாரியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட கன்றுக்குட்டிகள் மைசூருவில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சென்னராயப்பட்டணா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story