வால்பாறையில் மழைக்காலத்தில் அவதி, அரசு பஸ்களில் குடைபிடித்து செல்லும் பயணிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


வால்பாறையில் மழைக்காலத்தில் அவதி, அரசு பஸ்களில் குடைபிடித்து செல்லும் பயணிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2019 4:30 AM IST (Updated: 20 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் மழைக்காலத்தில் அரசு பஸ்களில் ஒழுகல் காரணமாக, பயணிகள் குடைபிடித்து செல்லும் அவல நிலை உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை,

வான்மழைக்காக தவம் இருக்கும் நிலை உள்ளது. ஆனால் வால்பாறையில் ஒரளவு மழை பெய்வதால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து உள்ளது. இது வால்பாறை பகுதி மக்களை மகிழ்ச்சிஅடைய செய்துள்ளது. ஆனால் அரசு பஸ்களில்தான் பயணிக்க முடிவில்லை. மழையால் பழுதான பஸ்களுக்குள் மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது. இதானல் குடையில்லாமல் அரசு பஸ்களில் பயணிக்க முடியுமோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து எஸ்டேட் பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கூறியதாவது:-

வால்பாறை அரசுபோக்குவரத்துக்கழக டெப்போவில் கிட்டத்தட்ட 29 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்த ஒரு பஸ்களும் முழுமையான தரத்தில் இல்லாமல் இருந்து வருகின்றன. பஸ்சின் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்தும், பஸ்களின் உள்ளே இருக்கைகள் பழுதடைந்தும், மேற்கூரைகள் முழுவதும் பழுதடைந்தும் பரிதாப நிலையில் காணப்படுகின்றன. இதனால் மழைத்தண்ணீர் முழுவதும் பஸ்சுக்குள் ஓயாத ஒழுகல். இதனால் பஸ்களுக்குள் குடைபிடித்துக்கொண்டு தான் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அன்றாடம் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எந்த ஒரு பஸ்களிலும் மாற்று டயர்கள், அவைகளை மாற்றுவதற்கான உபகரணங்கள் எதுவுமே கிடையாது. டயர் பஞ்சராகி அடிக்கடி நடுவழியில் நின்று விடுகின்றன. பின்னர் எதிரே வரக்கூடிய பஸ்சுக்கு காத்து நின்று அந்த பஸ்களிலிருந்து உபகரணங்களை வாங்கித்தான் டயர்களை மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

வால்பாறையில் தனியார் பஸ்கள் ஏதும் இல்லாத நிலையில் அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ள வால்பாறை பகுதி பயணிகள் அன்றாடம் அடையக்கூடிய சிரமங்களுக்கு அளவேயில்லை. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டிருப்பதால் அனைத்து பஸ்களும் ஒட்டை உடைசல் காரணமாக ஒழுகிக் கொண்டு தான் உள்ளன. பஸ்சின் கூரைகளில் ஆங்காங்கே தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பஸ்களில் இந்த அவலநிலைதான் நீடிக்கிறது. தற்போது தமிழகம் முழுவதும் புதிய அரசுபஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வால்பாறை பகுதியில் இயக்கப்பட்டு வரும் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்றி விட்டு புதிய அரசு பஸ்களை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story