துப்புரவு பணியாளர் இல்லாததால் 3 மாதத்திற்கு ஒருமுறை கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அகற்றம் - துர்நாற்றம் வீசும் அவலம்


துப்புரவு பணியாளர் இல்லாததால் 3 மாதத்திற்கு ஒருமுறை கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அகற்றம் - துர்நாற்றம் வீசும் அவலம்
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலைமான் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கழிவுநீர் வாய்க்காலில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த அவலம் தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 38 ஊராட்சிகள் உள்ளன.அதில் சிலைமான் ஊராட்சியும் ஒன்று.

இந்த ஊராட்சியில் 7,700 பேர் வசித்து வருகின்றனர். 70 தெருக்களை கொண்டுள்ளது. தெருக்களையும், கழிவுநீர்வாய்க்கால்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வது ஊராட்சி நிர்வாகத்தின் கடமை.

இந்த ஊராட்சியில் 2 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். அதில் ஒரு துப்புரவு பணியாளர் இறந்து விட்டார். இந்நிலையில் ஒரு ஊராட்சிக்கு ஒரே ஒரு துப்புரவு பணியாளரா என்று வியக்கும் விதத்தில் ஒரு துப்புரவு பணியாளர் பணியாற்றி வருகிறார். இதனையொட்டி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஊராட்சியில் முழுமையான சுகாதாரப்பணி மேற்கொள்ளாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சரிவர பணிக்கு வர முடியாத நிலையில் துப்புரவு பணியாளர் இருந்து வருகிறார். துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிவு நீர் வாய்க்கால்களில் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடும் அவல நிலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. ஆகவே சில சமயங்களில் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது.

துப்புரவு பணியாளர் இல்லாத நிலையில் ஊராட்சி நிர்வாகம் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதற்காக வெளி ஆட்களையும் பயன்படுத்தி வருகிறது. மேலும் 3 மாதத்திற்கு ஒரு முறை குவியல்குவியலாக தேங்கக்கூடிய மண், கல் சார்ந்த சாக்கடை குப்பையும் தனியார் வாகனத்தில் அள்ளி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி நிதி கூடுதலாக செலவிடப்படுகிறது.

கடந்த 3 மாதத்திற்கு பிறகு கடந்த 4 நாட்களாக வெளி ஆட்களை கொண்டு கூலி ஒப்பந்த அடிப்படையில் கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டு வாய்க்கால்களின் கரையின் நெடுகிலும் குவியல், குவியலாக வைக்கப்பட்டுள்ளன. அதை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கு வாகன வசதி இல்லாததால் வெளியில் இருந்து டிராக்டருக்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் தாமதம் ஏற்படுகிறது. 2 நாட்களாக கழிவுநீர் மற்றும் சாக்கடை குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இத்தகைய அவலம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகம் சிலைமான் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் வாகன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story