வாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை


வாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 20 July 2019 8:00 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி, 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை முல்லர் தெருவில் வசிப்பவர் அஷ்பாக்அஹமத் (வயது 50). தோல் வியாபாரியான இவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.

வீட்டிற்குள் சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அஷ்பாக்அஹமத் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்த போது பீரோ திறந்த நிலையில் கிடந்தது. அதில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வீட்டின் வென்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் அங்கு கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை – பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story