ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கவிழா மற்றும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா, 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் தேவசம்வர்த்தினி வரவேற்று பேசினார்.
விழாவில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், கேடயங்களை வழங்கி பேசினார். இதில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தரெட்டி, முன்னாள் ஓசூர் நகராட்சி கவுன்சிலர்கள் அசோகா, ஸ்ரீதர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், நவீன தொழிற்்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இது மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, கல்வித்தரம் எதிர்காலத்தில் சிறப்பாக அமையும். இந்த பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி உடனடியாக செய்து தரப்படும்.
மேலும், கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இப்பள்ளியை சேர்ந்த 125 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் பயன்படுத்தி, தங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் விழாவில் பேசினார்.
Related Tags :
Next Story