சிங்காரப்பேட்டை அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார்
சிங்காரப்பேட்டை அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது32). தொழிலாளியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கும் காணவில்லை.
இதுகுறித்து அவருடைய பாட்டி அலமேலு சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை அங்குள்ள கூட்டுறவு வங்கி அருகில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் மிதந்தது.
இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மிதந்தவரின் உடலை மீட்டனர். அப்போது பிணமாக மிதந்தவர் மாயமான பிரபு என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இருந்து மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story