தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 21 July 2019 4:45 AM IST (Updated: 20 July 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் திருச்சி, பெரம்பலூரில் உள்ள வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மங்களமேடு,

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தினார்கள். இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான ஜக்ரான் ஆசிம் என்ற பயங்கரவாத கும்பலுடன் சமூக வலைத்தளங்களில் கேரளா, தமிழகத்தை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தனர்.இவர்களை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட “அன்சருல்லா” என்ற இயக்கத்தின் பெயரில் தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்யும் நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டதும், இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த சிலர் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்தபடி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டியதும் தெரியவந்தது.

அப்போது பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்த பக்கீர் முகமது மகன் குலாம்நபி ஆசாத் (வயது 35) மற்றும் தேனி, மதுரை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 பேர் துபாயில் அன்சருல்லா இயக்கத்திற்கு நிதி திரட்ட தங்கியிருப்பது தெரியவந்தது. அந்த 14 பேரையும் துபாய் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை இந்திய தூதரகம் மூலம் விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 14 பேரும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர்.

கடந்த 15-ந் தேதி டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த இயக்கத்தினருடன் தொடர்புடைய ஆதரவாளர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கவும், மேலும் சில ஆதாரங்களை திரட்டவும் கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிக்குழுக்களை சேர்ந்தவர்கள் நேற்று 14 பேரின் சொந்த ஊர்களுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்த குலாம்நபி ஆசாத் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அதிரடியாக புகுந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 4 மணி நேரம் நீடித்து காலை 9.15 மணியளவில் முடிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் குலாம்நபி ஆசாத்துடன் தொடர்புடைய நண்பர்கள் யார், யார்? அவர்கள் எங்கு தங்கியுள்ளனர்?, அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக எங்கு பணியாற்றி வருகிறார்கள். அன்சருல்லா இயக்கத்திற்கும், அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குலாம்நபி ஆசாத் வீட்டில் அவர் பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் செல்போன், சிம் கார்டுகள், பயன்படுத்தாத சிம்கார்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவரது நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். குலாம்நபி ஆசாத் லெப்பைக்குடிக்காட்டில் எப்போது முதல் குடியிருந்து வருகிறார். இதற்கு முன்பு எங்கு குடியிருந்தார் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் குலாம்நபி ஆசாத் வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.

இதேபோல் கைதானவர் களில் மற்றொரு நபர் தஞ்சை மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த உமர்பாரூக். இவருடைய உறவினர்கள் திருச்சி பாலக்கரை கூனிபஜார் பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய வீட்டுக்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

கைதான உமர்பாரூக்கிற்கும் அன்சருல்லா இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா?. அது குறித்த ஆதாரங்கள் ஏதும் உள்ளதா? என கேட்டனர். அதன்பிறகு உமர்பாரூக்கின் நண்பர்கள் குறித்தும் விசாரித்தனர். ஆனால் அவரது வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.

இதேபோல் தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், முத்துப்பேட்டை, மயிலாடுதுறை, நெல்லை, தேனி மாவட்டம் ஆகிய இடங்களிலும் கைதாவர்களின் வீடுகளில் என். ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கைதானவர்களுக்கும், வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? என்று அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்திலும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Next Story