அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டங்களை அரசே ஏற்று நடத்திட வேண்டும் சண்முகராஜன் பேட்டி


அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டங்களை அரசே ஏற்று நடத்திட வேண்டும் சண்முகராஜன் பேட்டி
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 20 July 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டங்களை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என மாநில தலைவர் ரா.சண்முகராஜன் தெரிவித்தார்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி அருண் ஓட்டலில் மாநில தலைவர் ரா.சண்முகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் சகாயராஜ், பொருளாளர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அமிர்தகுமார், அரங்க.ஆனந்தகிருஷ்ணன், துரைப்பாண்டி, சரவணன், ஷீலா, குமார், பூங்குழலி உள்பட மாநிலம் முழுவதும் இருந்து வந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

1920-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1924-ம் ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பேரியக்கமான நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றி, அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களின் ஜீவாதார கோரிக்கைகள் பலவற்றை வென்றெடுத்தவரான மறைந்த சிவ.இளங்கோவுக்கு சேப்பாக்கம் வளாகத்தில் மார்பளவு சிலை அமைக்க அரசு அனுமதி அளிக்க கேட்டுக்கொள்வது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பணி காலத்தில் இறக்கும்போது, அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான நியமனத்திற்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநில தலைவர் ரா.சண்முக ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுடைய பிரதான கோரிக்கைகளாக விளங்கக்கூடிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். 21 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசாணை 56-ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும். ஒருநபர் ஊதியக்குழு முடிவுகளை அறிவித்து ஊதிய முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டங்களை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் பார்வைக்கு நீண்ட நாட்களாக வைத்துள்ளோம். ஆனால், தமிழக அரசு அது தொடர்பாக எவ்வித முடிவுகளையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் உருவாக்கி உள்ளது.

எனவே, எங்கள் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். எங்களது பிரதான கோரிக்கையாக விளங்கக்கூடிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உரிய ஆணையினை முதல்-அமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.

அதேபோல இன்று அரசு அலுவலர்கள் மத்தியில் ‘ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்’ என்ற திட்டத்தின் மூலம் அரசு அலுவலர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும், அரசு திட்டங்களை பயன்படுத்தக்கூடிய பயனாளிகளுக்கு மானியத்தொகை வழங்குவதற்கான ஒரு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டத்திற்குரிய மென்பொருட்கள் பலப்படுத்தாத காரணத்தால் அந்த திட்டம் வெற்றிக்கரமாக நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை தமிழக அரசு உணர்ந்து திட்டத்தை சீரமைக்கக்கூடிய பணிகளையும் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உருவாக்கிட வேண்டும்.

எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நாளை (இன்று) முதல்-அமைச்சரை சந்தித்து கடிதம் கொடுக்க இருக்கிறோம். அதன் பின்னரும் அழைத்து பேசவில்லை என்றால், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்களையும் அழைத்து போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story