மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்த முயற்சி: 9 இளம் பெண்கள் மீட்பு ஊழியர் கைது
தர்மபுரியில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்த முயன்ற 9 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி,
தர்மபுரி 4 ரோடு அருகே ஒரு தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி வளாகத்திற்குள் ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு இளம் பெண்களை வரவழைத்து விபசாரம் நடத்த முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அந்த மசாஜ் சென்டரில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு 9 இளம்பெண்கள் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 9 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்கள் கிருஷ்ணகிரி மற்றும் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மசாஜ் குறித்து பயிற்சி எடுக்க வந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர். உரிய விசாரணைக்கு பின்னர் அந்த பெண்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக அந்த மசாஜ் சென்டரில் ஊழியராக பணிபுரிந்த சத்தியமூர்த்தி (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். தங்கும் விடுதியின் உரிமையாளர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த மசாஜ் சென்டரை கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திகுமார், சேலத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அங்கு விபசாரம் நடத்தப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story