சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் சாவு
சேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம்,
சேலம் மேட்டுப்பட்டி எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்தையன் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு அரியானூர் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சக தொழிலாளிகளான வடிவேல், முத்து ஆகியோருடன் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். உடையாப்பட்டி பெருமாள்கோவில் மேடு பகுதியில் சென்றபோது, எதிரே அம்மாபேட்டையை சேர்ந்த மணிகண்டன் (24) மற்றும் அவரது நண்பர் மணி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது, அவர்களது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளி முத்தையன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், படுகாயத்துடன் கிடந்த வடிவேல், முத்து, மணி, மணிகண்டன் ஆகிய 4 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி என்பவரும் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதனால் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2- ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் படுகாயம் அடந்த மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story