செங்கத்தில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது போக்குவரத்து பாதிப்பு


செங்கத்தில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2019 9:45 PM GMT (Updated: 20 July 2019 6:30 PM GMT)

செங்கத்தில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கம்,

செங்கத்தில் துக்காப்பேட்டை முதல் மில்லத்நகர் வரை உள்ள பிரதான மாநில சாலை ஒன்றை மட்டுமே செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். செங்கம் நகரை கடந்து செல்ல வேண்டும் என்றால் மாற்று வழி அல்லது புறவழிச்சாலை கிடையாது.

சென்னை, வேலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கோவை, சேலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக சரக்கு லாரிகள் செங்கம் வழியாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் லாரிகள் மற்றும் சுற்றுலா வேன்கள், கார்கள் உள்ளிட்டவைகள் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர்களில் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. மேலும் இந்த பிரதான சாலை ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே குறுகி உள்ளது.

தடுப்புச்சுவர் அமைத்த நாள் முதல் இதுவரை 20-க்கும் மேற்பட்ட லாரிகள், சுற்றுலா வேன்கள் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று செங்கம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் தடுப்புச் சுவர் இருப்பது தெரியாமல் தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் லாரியின் முன்பக்க சக்கரங்களின் அச்சு முறிந்தது.

மேலும் லாரியில் இருந்து டீசல், ஆயில்கள் சாலையில் கொட்டியது. தொடர்ந்து செங்கம் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் சாலையில் சிந்தியிருந்த ஆயில், டீசல் மீது மண் கொட்டப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செங்கம் மெயின் ரோட்டில் உள்ள சாலை தடுப்புச்சுவரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துக்களை தடுக்க வேண்டும் எனவும் செங்கம் நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story