பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம்: நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம்: நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தி கைது சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எச்.வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டார்.

நாகர்கோவில்,

உத்தரபிரதேச மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பழங்குடியின விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எச்.வசந்தகுமார் எம்.பி. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்றபோது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்தியில் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில், மாநில பா.ஜனதா அரசை தவறாக பயன்படுத்துகிறார்கள். ஆட்சி என்ற மமதைதான் வீழ்ச்சிக்கு அறிகுறியாகும்.

நாங்கள் காந்தி, காமராஜர் வழியில் போராட்டம் நடத்துகிறோம். கர்நாடக அரசை கலைக்க முயற்சி நடக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜனநாயக முறையில் நாங்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். பிரியங்கா காந்தி மற்றும் நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் அலெக்ஸ், அசோக்ராஜ், காலபெருமாள், ராஜதுரை, மகேஷ் லாசர், கே.டி.உதயம், அனுஷா பிரைட், அருள் சபிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அழகியமண்டபத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தார். எச்.வசந்தகுமார் எம்.பி. சிறப்புரையாற்றினார். மாவட்ட பொது செயலாளர் ஜாண் இக்னேசியஸ், ரெத்தினகுமார், ஐ.என்.டி.யு.சி. அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிரியங்காகாந்தி கைதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Next Story