புதுக்கடை அருகே ஏ.டி.எம். கார்டு எண்ணை மர்ம நபரிடம் கூறியதால் ரூ.72 ஆயிரத்தை இழந்த பெண் போலீசில் புகார்


புதுக்கடை அருகே ஏ.டி.எம். கார்டு எண்ணை மர்ம நபரிடம் கூறியதால் ரூ.72 ஆயிரத்தை இழந்த பெண் போலீசில் புகார்
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 7:18 PM GMT)

புதுக்கடை அருகே ஏ.டி.எம். கார்டு எண்ணை மர்மநபரிடம் கூறியதால் ஒரு பெண் ரூ.72 ஆயிரத்தை இழந்தார்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே அள்ளம்பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார், தொழிலாளி. இவருடைய மனைவி லில்லிபாய். இவருக்கு புதுக்கடையில் உள்ள ஒரு வங்கியிலும், தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள வங்கியிலும் சேமிப்பு கணக்கு உள்ளது. சம்பவத்தன்று சுசில்குமார் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி லில்லிபாய் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

அதனால் உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டில் உள்ள 16 இலக்க எண் மற்றும் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட லில்லிபாய் உண்மை என்று நம்பி அனைத்து தகவலையும் மர்ம நபரிடம் கூறினார்.

ரூ.72 ஆயிரம் அபேஸ்

இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.72 ஆயிரம் எடுக்கப்பட்டதாக லில்லிபாய் செல்போனுக்கு தகவல் வந்தது. உடனே லில்லிபாய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனக்கு வந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

உடனே வங்கிக்கு சென்று நடந்த விவரத்தை லில்லிபாய் தெரிவித்தார். அப்போது வங்கி அதிகாரிகள், நாங்கள் யாரும் உங்களை அழைக்கவில்லை. மேலும் இதுபோன்று அழைப்பு வந்தால் எந்த தகவலும் கூற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினர். அதன் பிறகுதான், மர்மநபரிடம் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிவித்ததால் ரூ.72 ஆயிரத்தை இழந்த விவரம் லில்லிபாய்க்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து லில்லிபாய் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story