நெல்லிக்குப்பம் அருகே பஸ்சில் டிக்கெட் எடுக்காததை தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது; மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்காததை தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடலூர்,
கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு திருவந்திபுரம் மார்க்கமாக சென்றுகொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் கூட்டம் நிரம்பி இருந்தது. அப்போது பில்லாலி தொட்டியை சேர்ந்த மணி மகன் சூர்யா(வயது22) என்பவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். இதை கவனித்த பஸ் கண்டக்டர் அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் சூர்யாவுக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அருகில் இருந்த திருமாணிக்குழி புதுநகரை சேர்ந்த காசிநாதன்(33) என்பவர் சூர்யாவை பார்த்து டிக்கெட் எடுக்காமல் ஏன் பிரச்சினை செய்கிறாய் என கேட்டார். இதனால் காசிநாதனுக்கும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சூர்யா தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து 2 பேரை பில்லாலி தொட்டிக்கு வரும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் பில்லாலி தொட்டி பஸ்நிறுத்ததில் வந்து நின்றனர். பில்லாலி தொட்டி பஸ் நிறுத்தத்திற்கு பஸ் வந்தபோது சூர்யா உள்ளிட்ட 3 பேரும் பஸ்சில் ஏறி, காசிநாதனை திட்டி தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story