அரிமளம், ஆவுடையார்கோவில், கீரனூர் பகுதிகளில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா


அரிமளம், ஆவுடையார்கோவில், கீரனூர் பகுதிகளில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
x
தினத்தந்தி 20 July 2019 10:30 PM GMT (Updated: 20 July 2019 7:34 PM GMT)

அரிமளம், ஆவுடையார்கோவில், கீரனூர் பகுதிகளில் உள்ள அய்யனார்கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

அரிமளம்,

அரிமளம் அருகே உள்ள ஒணாங்குடி ஊராட்சியில் காட்டுப்பகுதியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் புரவி எடுப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அய்யனார், பெரிய கருப்பர், சின்ன கருப்பர், அடைக்கலம் காத்த அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது.

முன்னதாக மண்ணால் ஆன 9 குதிரைகளை ஒணாங்குடி காட்டுக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட முதல் கரைகாரர்கள் சேர்ந்து துண்டு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து, ஒணாங்குடி குதிரை திடலில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி செல்வம் வேண்டியும், விளைச்சல் அதிகரிக்க வேண்டியும், மழை வளம் வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து இரவு பெரியகருப்பர், சின்னகருப்பர் சுவாமிகளுக்கு கிடாவெட்டி படையலிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவுடையார்கோவில் அருகே கருங்காட்டில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான புலிக்குட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குதிரை எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.

இதையொட்டி மண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை ஆவுடையார்கோவில் அருகே உள்ள காராகுடி கிராமத்தில் இருந்து கருங்காடு தும்பை மலர் கிராமத்தார்கள் தோளில் சுமந்து கொண்டு புலிக்குட்டி அய்யனார் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரனூர் அருகே குளத்தூரில் கோவில்காடு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் குளத்தூர், இளையாவயல், கோவில்காடு பொதுமக்கள் சார்பில் மழை பெய்ய வேண்டியும், ஊரில் நன்மை நடைபெற வேண்டியும் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி மண்ணால் செய்யப்பட்ட புரவிகளை குளத்தூர் வேளார் திடலில் திரளான பக்தர்கள் ஊர்வலமாக கோவில்காடு அய்யானார் கோவிலுக்கு தூக்கி சென்றனர். பின்னர் அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story