கமுதி அருகே அண்ணனை பழிவாங்க வாலிபரை கொன்ற பயங்கரம்; 2 சிறுவர்கள் கைது


கமுதி அருகே அண்ணனை பழிவாங்க வாலிபரை கொன்ற பயங்கரம்; 2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 21 July 2019 5:15 AM IST (Updated: 21 July 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே அண்ணனை பழிவாங்க அவரது தம்பியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாரி என்பவரது மகன் மணி (வயது 23). இவரது அண்ணன் சேகர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எருமைக்குளத்தை சேர்ந்த வழிவிட்டான் என்பவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மதுரையை சேர்ந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளதால் தற்போது சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் வழிவிட்டான் கொலையில் தொடர்புடைய சேகரை பழிவாங்கும் நோக்கத்தில் அவரது தம்பி மணியை தீர்த்துக்கட்ட மதுரையை சேர்ந்த சுந்தர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் அரியமங்கலத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளனர். சுந்தர், மணிகண்டனுக்கு உறவினராவார். சுந்தருக்கு அரியமங்கலம் தான் சொந்த ஊர் என்றாலும் தற்போது மதுரையில் வசித்து வருகின்றார். 2 நாட்களாக அரியமங்கலத்தில் தங்கியிருந்த இவர்கள் மணிகண்டனிடம் நன்றாக பழகினர். அதேநேரத்தில் மணியை கொலை செய்ய தக்க தருணத்துக்காக காத்து இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வாலிபர் மணியை சந்தித்து நைசாக பேசி மதுபாட்டில்கள் வாங்கி வரச்செய்ததுடன் அவரது வீட்டில் இருந்தே தண்ணீர் கொண்டு வரும்படியும் கூறியுள்ளனர். விபரீதத்தை உணராத மணி தனது வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அரியமங்கலம் இ-சேவை மையம் அருகில் வந்தபோது பதுக்கி வைத்திருந்த வாள் மற்றும் அரிவாளால் அந்த கும்பல் வாலிபர் மணியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது. தகவல் அறிந்து பெருநாழி போலீசார் அங்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் இந்த கொலையில் தொடர்பு உடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story