தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்து வைத்துள்ளது - தொல்.திருமாவளவன் பேச்சு


தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்து வைத்துள்ளது - தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 20 July 2019 11:45 PM GMT (Updated: 20 July 2019 8:14 PM GMT)

தேசிய கல்வி கொள்கைக்கான அறிக்கையில் பல இடங்களில் கண்ணிவெடிகளை மத்திய அரசு புதைத்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.

மதுரை,

தேசிய கல்வி கொள்கை வரைவுக்கு எதிரான பரப்புரை இயக்கத்தின் சார்பில் தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கருத்தரங்கம், பொது உரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தேசிய கல்வி கொள்கையை வேடிக்கை பார்ப்பவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தீமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய கல்வி கொள்கைக்கான 480 பக்க அறிக்கையில் பல இடங்களில் கண்ணி வெடிகளை மத்திய அரசு புதைத்து வைத்துள்ளது. இந்த அறிக்கை 130 கோடி மக்களுக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் எதிரானது.

வெளிநாடுகளில் 5 வயது, 6 வயதுகளில் தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இந்தியாவில் கல்வியை வணிகமயமாக்கி விட்டார்கள். இதன் மூலம் பிஞ்சுக்குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை தருகிறார்கள். தாய் மொழியை புறந்தள்ளிவிட்டு செயற்கையாக ஆங்கிலத்தை திணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை மூலம் பிராந்திய மொழிகளைச் சிதைத்து இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது. இந்தி பேசும் மக்களைக் கொண்ட தேசமாக இந்தியா இருக்கவேண்டுமென பா.ஜ.க. விரும்புகிறது. கல்வியை தனியார் மயமாக்க அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டிய அரசு, மதுக்கடைகளை நடத்தி வருகிறது. கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

மக்களுக்குத்தரும் அனைத்து இலவசங்களையும் நிறுத்தி விட்டு பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை இலவசமாக வழங்கவேண்டும். மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், மதுரை எம்.பி. வெங்கடேசன், இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story