டெல்லியில் கைதான 14 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை திருவாரூர், நாகை உள்பட 9 மாவட்டங்களில் நடந்தது


டெல்லியில் கைதான 14 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை திருவாரூர், நாகை உள்பட 9 மாவட்டங்களில் நடந்தது
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் கைதான 14 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். திருவாரூர், நாகை உள்பட 9 மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது.

தஞ்சை,

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் களையெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத இயக்கத்தை தமிழ்நாட்டில் காலூன்ற வைப்பதற்கு சிலர் மறைமுகமாக முயற்சிப்பதாகவும், சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டுதல், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக அப்பாவி இளைஞர்களிடம் மூளைச்சலவை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை, நாகையில் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

நாடு கடத்தப்பட்டவர்கள்

சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் அமைந்துள்ள ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ அலுவலகம் மற்றும் சென்னை வேப்பேரியில் உள்ள அந்த அமைப்பின் தலைவர் சையத் புகாரி வீட்டிலும், நாகை சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசன் அலி, மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

இவர்களில் அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் தாங்கள் வேலை பார்த்து வந்த ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்களுடைய வீடுகளில் 10 மணி நேரம் நீடித்த சோதனையில், 9 செல்போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்-டாப்கள், 5 ஹார்ட் டிஸ்க்குகள், 6 பென் டிரைவ்கள், 2 டேபிளட்கள், 3 டி.வி.டி.கள், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான பேனர்கள், நோட்டீசுகள், புத்தகங்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லியில் 14 பேர் கைது

தமிழகத்தில் நாசவேலைகளில் ஈடுபட அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கையில் சிக்கியது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

நாகையில் இருந்து 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சென்னை அழைத்து வரப்பட்டு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் டெல்லியில் முகாமிட்டு பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வருவதாகவும், அவர்கள் 14 பேரும் தங்களை போலவே ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்றும் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லியில் பதுங்கி இருந்த 14 பேரையும் கைது செய்தனர்.

சென்னை அழைத்து வந்தனர்

கைது செய்யப்பட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த அகமது அசாருதீன், சென்னையைச் சேர்ந்த தவுபிக் அகமது, தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்த முகமது அப்சர், மீரான் கனி, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரபி அகமது, முன்தாசீர், பைசல் செரீப், மொய்தீன் சீனி சாகுல் அமீது, பாரூக், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த உமர் பாரூக், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா லெப்பைகுடிகாட்டைச் சேர்ந்த குலாம்நபி ஆசாத் ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் அனைவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் டெல்லியில் இருந்து எல்லை பாதுகாப்பு படை விமானம் மூலம் கடந்த 15-ந்தேதி சென்னை அழைத்து வந்தனர். பின்னர் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுத்து விசாரணை

நாகையில் கைது செய்யப்பட்ட அசன் சலி, ஹாரிஸ் முகமது, டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரையும் 8 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதையடுத்து 16 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டனர்.

ஏற்கனவே நாகையில் அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அலசி ஆராய்ந்துவிட்டனர்.

வீடுகளில் அதிரடி சோதனை

இந்த நிலையில் டெல்லியில் கைதான 14 பேரின் வீடுகளில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை கொத்தவால்சாவடி டேவிட்சன் தெருவில் தவுபிக் அகமது வீட்டில் என்.ஐ.ஏ. துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.

திருவாரூர், நாகை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த அகமது அசாருதீன் வீட்டுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்ற போது, வீடு பூட்டிக்கிடந்தது. அதிகாரிகள் விசாரித்த போது, அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் அகமது அசாருதீன் வீட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது வீடு பூட்டி கிடந்தது. இதனால் உறவினரிடம் இருந்து சாவியை வாங்கி வீட்டை திறந்து சோதனை போட்டனர்.

இந்த சோதனை குறித்து என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

செல்போன்கள் பறிமுதல்

‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி நாட்டில் வெடிகுண்டு, விஷம், ஆயுதங்கள், வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் நாகையைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் வீடுகளில் ஏற்கனவே சோதனை முடிந்துவிட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மற்ற 14 பேரின் வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 9 மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களிலும், தேனி மாவட்டத்தில் 2 இடங்களிலும், சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சை, நாகை, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது 1 லேப்டாப், 7 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 2 பென் டிரைவ், டேட்டா கருவி, 9 சி.டி., டி.வி.டி.க்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, சைபர் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story