வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு


வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு
x
தினத்தந்தி 21 July 2019 3:00 AM IST (Updated: 21 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் சோலையார் அணையில் நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ளது.ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழை கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. கடந்த புதன்கிழமை முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழை வியாழக்கிழமை முதல் மிக கனமழையாக இடைவிடாமல் இரவு பகலாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. சோலையார் சுங்கம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது.

இந்த மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு வந்த மாணவ,மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்் கொட்டும் மழையில் தங்களது தலைகளில் பிளாஸ்டிக்பைகளை போட்டுக் கொண்டு மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தேயிலை இலை பறிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மழை காரணமாக சோலையார்அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. வால்பாறையில் 62 மி.மீ.மழையும்,சோலையார் அணையில் 63 மி.மீ.மழையும், கீழ்நீராரில் 71 மி.மீமழையும் பெய்துள்ளது.

சோலையார் அணைக்கு வினாடிக்கு 2652.78 கனஅடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையார்அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 40.53 அடியாக உள்ளது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் சமவெளிப்பகுதி மக்களின் விவசாயத் தேவைகள், குடிநீர் தேவைகளை நிறைவேறுவதற்கும், மின்சார உற்பத்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறை பகுதி முழுவதும் பரவலாக விடிய, விடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

Next Story