ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 July 2019 3:45 AM IST (Updated: 21 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம்,

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள வடகால், தென்கால் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் உறைகிணறுகள் அமைத்து, பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான ஊர்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கோடையை முன்னிட்டு, கடும் வறட்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், அணைகளில் இருந்து நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வடகால், தென்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை முழுவதும் அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் தடுப்பணையில் உள்ள தண்ணீரும் வேகமாக ஆவியாவதால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் உள்ள அமலைச்செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story