நீர்வரத்து குறைந்ததால் தடை நீங்கியது: குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசியில் கடந்த சில நாட்களாக இதமான சூழ்நிலை நிலவியது. குற்றாலம், தென்காசி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலையில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இருந்தாலும் அவர்கள் புலியருவியில் விழுந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் நேற்று காலையில் இருந்தே வெயில் இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் அதில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் இருந்தே குற்றாலத்தில் குவிந்தனர். ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காலை 6.30 மணி அளவில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் காலை 8.45 மணி அளவில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்ததால் அங்கும் அவர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சீசன் களைக்கட்டி உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story