தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புழுதிக்காற்றிலும் பறந்து சென்ற விமானம்
தூத்துக்குடியில் நேற்று வீசிய புழுதிக்காற்றிலும் சென்னைக்கு விமானம் பறந்து சென்றது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்று அவ்வப்போது புழுதியை வாரி இறைப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் பலர் கடலுக்கு செல்லவில்லை.
இதே போன்று விமான நிலைய பகுதியிலும் லேசான புழுதிக்காற்று வீசியது. ஆனாலும் சென்னையில் இருந்து விமானம் நேற்று வழக்கம் போல் தூத்துக்குடிக்கு வந்தது. பின்னர் சென்னைக்கு விமானம் புழுதிக்காற்று இடையே பறந்து சென்றது.
மேலும் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் உள்ள திறந்த வெளி பகுதியில் வீசிய பலத்த காற்று மணலை வாரி இறைத்தது. இந்த மணல் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையின் நடுவில் வைக்கப்பட்டு உள்ள காங்கிரீட் தடுப்பின் அருகில் சுமார் ½ அடி உயரத்துக்கும், 4 அடி அகலத்துக்கும் மணல் திட்டு உருவானது.
இதனால் அந்த சாலையில் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. வாகனங்கள் அந்த பகுதிகளில் மெதுவாக மணல் குவியலை தவிர்த்து சென்றன. இரவு நேரங்களில் அதன் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடனடியாக மணல் திட்டை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story