மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி 2-வது நாளாக கடையடைப்பு


மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி 2-வது நாளாக கடையடைப்பு
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை பகுதியில் நேற்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை நகராட்சி பொன்விழா கண்ட நகராட்சி என்ற பெருமைக்குரியது. மயிலாடுதுறை உட்கோட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 4 தாலுகாக்கள் உள்ளன. மேலும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும் மயிலாடுதுறை அமைந்து உள்ளது.

1861-ம் ஆண்டு மயிலாடுதுறை வழியாக சென்னை, தூத்துக்குடி மெயின் லைன் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே மயிலாடுதுறையில் உதவி கலெக்டர் அலுவலகம், சப்-கோர்ட்டு, உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்ததை பிரித்து கடந்த 1991-ம் ஆண்டு நாகை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 28 ஆண்டுகளாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினர் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் கடந்த 1997-ம் ஆண்டு நாகை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

இதனால் மயிலாடுதுறை உட்கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அதிருப்திக்கு உள்ளாயினர். சாத்தியப்பட்ட கோரிக்கையான மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்க அரசியல் கட்சி சார்பற்ற மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள், வக்கீல்கள், டாக்டர்கள், சேவை சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் அடங்கிய அமைப்பினர் அழுத்தமான தொடர் போராட்டம் நடத்தினால்தான் மயிலாடுதுறையை மாவட்டமாக வென்றெடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதன் எதிரொலியாக மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை தற்போது நடைபெறும் சட்டசபை கூட்ட தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மயிலாடுதுறை பகுதி பொதுமக்களுக்கு தற்போதும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வர்த்தக சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மயிலாடுதுறையில் உள்ள அன்தைது கடைகளும் அடைக்கப்பட்டன. நேற்று 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இதையொட்டி முக்கிய கடைவீதிகளான காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரியக்கடைத்தெரு, மகாதானத்தெரு, கச்சேரி சாலை, காமராஜர் சாலை, கூறைநாடு, பூக்கடைத்தெரு, ரெயிலடி, டவுன் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள், பெட்டி கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் மயிலாடுதுறையில் உள்ள முக்கிய கடைவீதிகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில், மருந்துக்கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக மயிலாடுதுறையை சுற்றி உள்ள மக்கள் மட்டுமல்லாது வெளியூரில் இருந்த வந்த பயணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். மயிலாடுதுறையில் பூட்டிய கடைகளின் கதவுகளில் மயிலாடுதுறை மாவட்டம் அறிக்க வேண்டும் என்று எழுதிய அட்டைகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. கடந்த 2 நாட்களாக நடந்த இந்த கடையடைப்பு போராட்டத்தால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இழப்பை பொருட்படுத்தாமல் அனைத்து வியாபாரிகளும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இதேபோல் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி சீர்காழியில் வர்த்தகர்கள் சங்கம், வர்த்தக நலசங்கம், புதிய பஸ் நிலைய வர்த்தக சங்கம் ஆகியன சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி கடைவீதி, வடக்குவீதி, கச்சேரி ரோடு, புதிய பஸ் நிலையம், மருத்துவமனை சாலை, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்கள் திருவாரூர் மாவட்டத்தில் இணைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, வேதனை அளிக்கிறது. பல ஆண்டுகளாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தற்போது திருவாரூர் மாவட்டத்துடன் இணைக்கப்படுவதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், பொறையாறு, தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், கொள்ளிடம், புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், புத்தூர், திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த கடையடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சீர்காழியில் வர்த்தக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோவி நடராஜன், பொது தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சங்கர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உத்ரா பொன்னழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது தொழிலாளர் சங்க தலைவர் ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். இதில் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story