தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வேலூர் வருகை


தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வேலூர் வருகை
x
தினத்தந்தி 21 July 2019 10:00 PM GMT (Updated: 21 July 2019 2:54 PM GMT)

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட 2 பட்டாலியனை சேர்ந்த 180 துணை ராணுவத்தினர் வேலூருக்கு வந்துள்ளனர்.

வேலூர், 

இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர மற்ற 38 தொகுதிகளிலும் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனையும் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட 2 பட்டாலியனை சேர்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை துணை ராணுவத்தினர் வேலூருக்கு நேற்று முன்தினம் வந்தனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதல் கட்டமாக 2 பட்டாலியன் மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 180 துணை ராணுவத்தினர் வருகை புரிந்துள்ளனர். ஒரு பட்டாலியனை சேர்ந்த 90 பேர் ஊசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திலும், மற்றொரு பட்டாலியனில் உள்ள 90 பேர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திலும் தங்கியுள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் நெய்வேலியில் இருந்து ரெயில் மூலம் வந்துள்ளனர்.

ஊசூர் பகுதியில் தங்கி உள்ளவர்கள் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பகுதியிலும், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ளவர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பணி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது. அவர்கள் பொதுமக்களிடம் அச்சத்தை போக்க அணிவகுப்பில் ஈடுபட உள்ளனர். அடுத்த கட்டமாக 3 பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவத்தினர் வர உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story