ஆண் குழந்தை விற்ற விவகாரம்: தாய்-தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு


ஆண் குழந்தை விற்ற விவகாரம்: தாய்-தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 4:31 PM GMT)

ஆண் குழந்தையை விற்ற விவகாரத்தில் தாய்-தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே வள்ளுவர்புரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். பெயிண்டர். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்கள் தங்களின் 15 மாத ஆண் குழந்தையான குணவெற்றியை ரூ.25 ஆயிரத்திற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து அந்த குழந்தையை மீட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் மீட்கப்பட்ட குழந்தை பின்னர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து குழந்தையை மீட்டு வந்த அதிகாரிகள் ஓசூரில் உள்ள பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வின்சென்ட் சுந்தர்ராஜ் மகராஜகடை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் விசாரணை நடத்தி குழந்தையை விற்பனை செய்த குமரேசன், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் குழந்தையை வாங்கிய ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த தசீர் பாஷா, கிருஷ்ணப்பா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இவர்கள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story