குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 21 July 2019 9:30 PM GMT (Updated: 21 July 2019 5:43 PM GMT)

குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்காசி, 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் சீசன் களை கட்டும். இருப்பினும் கடந்த வாரங்களில் சரியான மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலையில் இருந்தே வெயில் இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இடையிடையே சாரல் மழை தூறியது. இதனால் குற்றாலத்தில் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

அருவிகளில் பெண்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அருவிகளில் குளிக்கும்போது சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு நகைகள் அணிந்து வரும் பெண்கள் தங்கள் நகைகளை உடையுடன் இணைத்துக் கொள்ள ‘சேப்டி பின்‘களை போலீசார் வழங்கினர். அதனை பெண்கள் வாங்கிக் கொண்டு நகைகளை தங்களது உடையுடன் இணைத்து மாட்டிக்கொண்டு குளிக்க சென்றனர். 

Next Story