பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார் முதியவர் படுகொலை; நகை கொள்ளை மொபட்டும் திருட்டு


பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார் முதியவர் படுகொலை; நகை கொள்ளை மொபட்டும் திருட்டு
x
தினத்தந்தி 21 July 2019 9:45 PM GMT (Updated: 21 July 2019 5:57 PM GMT)

பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணமாக கிடந்தார். மர்மநபர்கள் அவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, 3 பவுன் நகையை கொள்ளையடித்ததுடன், மொபட்டையும் திருடிச்சென்று உள்ளனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம், வி.என்.டி. அவென்யூ, குறிஞ்சி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் பாஸ்கரன்(வயது 78). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சுசீலா. இவர்களுக்கு மணிகண்டன், மகேந்திரபிரபு என 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் மணிகண்டன் வெளிநாட்டிலும், இளைய மகன் மகேந்திர பிரபு மணிமங்கலத்திலும் வசித்து வருகிறார்கள். சுசீலா, 2-வது மகனுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக பாஸ்கரன், மனைவியை விட்டு பிரிந்து இந்த வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அதில் வரும் வருமானத்தை கொண்டு பிழைத்து வந்தார்.

கடந்த சில நாட்களாக பாஸ்கரன் வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. இதனால் அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கருதிவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாஸ்கரன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவருடைய மகன் மகேந்திர பிரபுவுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாஸ்கரன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. எனவே அவர், கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போரூர் உதவி கமிஷனர் செம்பேடுபாபு தலைமையில் மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையான பாஸ்கரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பாஸ்கரன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் வீட்டு வளாகத்தில் நிறுத்தி இருந்த அவரது மொபட்டும் மாயமாகி இருந்தது.

மர்மநபர்கள், பாஸ்கரனை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, 3 பவுன்நகையை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அங்கு நிறுத்தி இருந்த மொபட்டையும் திருடிச்சென்று உள்ளதாக தெரிகிறது.

கொலையான பாஸ்கரன், அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வரும் காவலாளி மணி என்பவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. பாஸ்கரன் கொலைக்கு பிறகு அவர் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

எனவே மணிதான், பாஸ்கரனை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, நகை மற்றும் மொபட்டை திருடிச்சென்றாரா? அல்லது பாஸ்கரன் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் யாராவது அவரை கொலை செய்து விட்டு நகை, மொபட்டை திருடிச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story