அயோடின் கலந்த உப்பு, நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஒருங்கிணைப்பு குழுவிற்கு கலெக்டர் அறிவுரை


அயோடின் கலந்த உப்பு, நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் ஒருங்கிணைப்பு குழுவிற்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 6:27 PM GMT)

அயோடின் கலந்த உப்பு நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழுவிற்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் அயோடின் உப்பு பயன்பாட்டினை உறுதி செய்தல் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

அயோடின் சத்து குறைபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உப்பின் மூலமாக அயோடின் சத்தை கலந்து அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உணவிற்காக விற்பனை செய்யப்படும் உப்பில் கட்டாயம் அயோடின் கலக்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியதோடு உணவு பாதுகாப்பு சட்டத்திலும் உணவிற்காக விற்பனை செய்யும் உப்பில் கட்டாயம் அயோடின் கலக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான அளவு அயோடின் கலக்கப்படாத உப்பு பாக்கெட்டுகள், தயாரிப்பாளர்கள், போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டில் அயோடின் கலக்காத உப்பினையும், பதப்படுத்தும் உபயோகம் என உப்பு பாக்கெட்டின் அடியில் குறிப்பிட்டு உணவிற்காக விற்பனை செய்து வருபவர்கள் மீது சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மளிகை கடைகளிலும் ஒரு மாத காலத்திற்குள் அதிகாரிகள் ஆய்வு செய்து அயோடின் உப்பு விற்பனை தொடர்பாக உரிய விழிப்புணர்வை மளிகை கடை நடத்தி வருபவர்களுக்கு அளித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

அயோடின் உப்பு உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வோர் பயன்பாடு அனைத்தையும் கண்காணிக்கும் விதத்தில் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வினர் அனைவரும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம் அயோடின் கலந்த உப்பு நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து சமையல் உப்பில் 100 சதவீதம் அயோடின் இருப்பதை உறுதி செய்வதற்கான கருவியை அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) சிவகிரு‌‌ஷ்ணமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story