மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி குத்தாலம் பகுதியில் கடைகள் அடைப்பு


மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி குத்தாலம் பகுதியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 22 July 2019 4:45 AM IST (Updated: 22 July 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி குத்தாலம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வியாபாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

நெல்லை மாவட்டத்துடன் இணைந்திருந்த தென்காசி, காஞ்சீபுரம் மாவட்டத்துடன் இணைந்திருந்த செங்கல்பட்டு ஆகியன தனி மாவட்டங்களாக சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டன. ஆனால் நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை கோட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாக்கள் உள்ளன. இதில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளும் அடங்கும். மயிலாடுதுறை ஒரு நாடாளுமன்ற தொகுதியாகவும் உள்ளது.

மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில் மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் என பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஆனால் சட்டசபை கூட்ட தொடரில் மயிலாடுதுறை புதிய மாவட்டம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கடந்த 19-ந் தேதி, 20-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று குத்தாலம் வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குத்தாலம் கடைவீதி மட்டுமின்றி குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோமல், மங்கைநல்லூர் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதையொட்டி குத்தாலம் கடைவீதியில் நேற்று காலை வியாபாரிகள், சேவை அமைப்பை சேர்ந்தவர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story