வறண்டு கிடக்கும் கல்லணை: ஒரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


வறண்டு கிடக்கும் கல்லணை: ஒரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 7:12 PM GMT)

கல்லணை வறண்டு கிடக்கும் நிலையில் ஒரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு (2019) காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி பாசன பகுதியில் 4½ லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதத்தில் கர்நாடகத்தில் கொட்டித்தீர்த்த மழையால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை மாதம் 22-ந் தேதி) கல்லணை திறக்கப்பட்டது. மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது. ஆனால் இந்த ஆண்டு அதே நாளான இன்று கல்லணை தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மதகுகள் அருகே சிறிதளவே தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் தண்ணீர் திறக்கப்பட்டபோது கல்லணை விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் இன்று கல்லணை வறண்டு, களை இழந்து கிடப்பது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

இந்த ஆண்டு மேட்டூர் மற்றும் கல்லணை இதுவரை திறக்கப்படாத நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதியில் ஆற்றுப்பாசன விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர். இவர்கள் ஒரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் உபரி நீரை மேட்டூர் அணையில் சேமித்து, அணை முழு கொள்ளளவை எட்டிய பின்னர் ஒருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். 

Next Story