மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி


மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சூரியனார்கோவிலில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரக பரிகார தலங்களில் சூரியனுக்கு உரிய கோவிலாக கருதப்படுகிறது. இங்கு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியபெருமானுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிவசூரியபெருமானுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. இதையடுத்து உஷா தேவி, சாயா தேவியுடன் சிவசூரிய பெருமான் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. இதில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

சாமி தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிரிக்கெட்டில் இந்திய அணி மிகச்சிறந்த அணியாக விளங்குவதுடன், பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் மறுநாள் ஆட்டம் நடந்தது.

இதேபோல் 1980-ம் ஆண்டு கால கட்டத்திலும் நடந்துள்ளது. இது வழக்கமான நடைமுறைகளுள் ஒன்றுதான். அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதல் 4 விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் துரதிர்ஷ்டவசமாக தோற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். உலக கோப்பையில் மற்ற ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்த்துள்ளது.

மாணவர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். பலவிதமான விளையாட்டு போட்டிகளில் நமது நாட்டின் மாணவ, மாணவிகளை பங்கேற்க செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர் துணை நிற்பது அவசியம். உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பெற்றது மிகப்பெரிய பெருமை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story