தானே சகாப்பூரில் துபாய் ஓட்டல் அதிபர் அடித்து கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


தானே சகாப்பூரில் துபாய் ஓட்டல் அதிபர் அடித்து கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 22 July 2019 3:30 AM IST (Updated: 22 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

தானே சகாப்பூரில் துபாய் ஓட்டல் அதிபரை அடித்து கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் சுரேஷ் முனாஜே (வயது48). துபாயில் ஓட்டல் நடத்தி வருகிறார். தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் இவருக்கு சொந்தமான ஒரு பங்களா வீடு உள்ளது. கடந்த சில தினங்களாக சுரேஷ் முனாஜே அந்த பங்களா வீட்டில் தனியாக தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் காலை அந்த பங்களா வீட்டு வேலைக்காரர் பணிக்கு வந்தார்.

அப்போது வீட்டு அறையில் சுரேஷ் முனாஜே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலைக்காரர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் நள்ளிரவு நேரத்தில் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்மஆசாமிகள் அவரை கை, கால்களை கட்டிப் போட்டு அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

போலீசார் சுரேஷ் முனாஜேயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறியவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story