ஈரோட்டில் சாலையில் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்டவரை மீட்ட இளைஞர்–இளம்பெண்கள்; புத்தாடை வாங்கி கொடுத்து காப்பகத்தில் சேர்த்தனர்


ஈரோட்டில் சாலையில் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்டவரை மீட்ட இளைஞர்–இளம்பெண்கள்; புத்தாடை வாங்கி கொடுத்து காப்பகத்தில் சேர்த்தனர்
x
தினத்தந்தி 21 July 2019 11:15 PM GMT (Updated: 21 July 2019 8:44 PM GMT)

ஈரோட்டில் சாலையில் சுற்றி திரிந்த மனநல பாதிக்கப்பட்டவரை இளைஞர்–இளம்பெண்கள் மீட்டு புத்தாடை அணிவித்து காப்பகத்தில் சேர்த்தனர்.

ஈரோடு,

கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள், வேலையில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், இளம்பெண்கள் விடுமுறை நாட்களில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயற்கை விவசாயத்தை மீட்பது, மரக்கன்றுகளை நடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன்படி அட்சயம் அறக்கட்டளை என்ற பெயரில் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் இணைந்து சாலையோரமாக பிச்சை எடுப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் ராசாம்பாளையம்பிரிவு பகுதியில் சில ஆண்டுகளாக ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்தார். இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் கடந்த சில நாட்களாக அந்த பகுதிக்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்டவரின் விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர் பொன்ராஜ் என்பதும், 35 வயதுடையவர் என்றும் தெரியவந்தது. மேலும், அவர் குடும்பத்தை பிரிந்து வந்து கடைகள், வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்க இளைஞர்கள் முடிவு செய்தனர்.

அட்சயம் அறக்கட்டளை அமைப்பின் செயல் மேலாளர் மணிஷா தலைமையில் 12 பேர் மாணிக்கம்பாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு சாலையோரமாக அழுக்கான உடையை அணிந்து கொண்டு இருந்த பொன்ராஜிடம் சென்று தாங்கள் உதவி செய்ய வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட பொன்ராஜூம் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க ஒத்துழைப்பு கொடுத்தார்.

அதே பகுதியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பொன்ராஜூக்கு முடியை திருத்தி குளிப்பாட்டினார்கள். பின்னர் புதிய சட்டை, வேட்டியை பொன்ராஜூக்கு அவர்கள் அணிவித்தனர். இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள அன்புஜோதி காப்பகத்தில் அவரை சேர்க்க அழைத்து சென்றனர்.

சாலையில் சுற்றி திரிந்த பொன்ராஜை பரிவுடன் மீட்டு காப்பகத்தில் சேர்க்க முயற்சி எடுத்த இளைஞர்–இளம்பெண்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இதுகுறித்து அட்சயம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் கூறுகையில், ‘‘சாலையோரமாக சுற்றி திரிபவர்களையும், பிச்சை எடுப்பவர்களையும் மீட்டு மறுவாழ்வு அளித்து வருகிறோம். அவர்களுடைய விருப்பப்படி குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், வேலைக்கு செல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்த்து பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஈரோடு, நாமக்கல், திருச்சி போன்ற மாவட்டங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் செயல்படுகிறார்கள். இதுவரை சுமார் 350 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்’’, என்றார்.


Next Story