பவானி அருகே நின்ற லாரி மீது கார் மோதல்: அமெரிக்காவில் பணிபுரிந்த சேலம் டாக்டர் சாவு
பவானி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில், சென்னை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அமெரிக்காவில் பணிபுரிந்த சேலம் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.
பவானி,
சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 42). இவர் அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். சேலத்தில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்காக தேவராஜ் கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் கருத்தரங்கை முடித்துவிட்டு அமெரிக்கா செல்வதற்காக நேற்று சேலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்தார்.
வாடகை காரை சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே சமத்துவபுரம்மேடு பகுதியில் வாடகை கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வாடகை காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் டிரைவர் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்த தேவராஜுக்கு திருமணம் ஆகி மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர்.